செய்திகள்

நதிநீர் இணைப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2017-08-14 04:08 GMT   |   Update On 2017-08-14 04:08 GMT
நதிநீர் இணைப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2 வருடமாக தமிழ்நாட்டில் வானம் பொய்த்துவிட்டதால் விவசாயம் அடியோடு அழிந்துவிட்டது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனை கட்டமுடியாமலும், மேலும் விவசாயம் செய்ய முடியாமலும், வாழ்க்கையை நடத்த வழி தெரியாமல் திண்டாடுகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை அண்டை மாநிலமான கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, காவிரியில் நமக்கு முறையாக தரவேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது. அதோடு சிறிதளவு வரும் தண்ணீரையும் தடுப்பணைக் கட்டி தடுக்க முயற்சி செய்கிறது.

கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கக்கூடாது என்கிறது. ஆந்திர அரசும் தண்ணீர் தர தயங்குகிறது. ஆக நமது தமிழகம் நீர் ஆதாரம் இல்லாமல் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கின்றது.

இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும் என்றால் தேசிய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும். கடலில் கலக்கும் தண்ணீர் 25 சதவிகிதம் அனைத்து மாநிலங்களுக்கு கிடைத்தாலே இந்தியா விவசாயத்தில் வளம் கொழிக்கும் நாடாக மாறிவிடும். இதற்காக ஆகும் செலவுகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு துரித நடவடிக்கை எடுத்தால் விவசாயம் பாதுகாக்கப்படும், தொழில் வளரும், மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

நதிநீர் இணைப்பிற்காக ஆகும் செலவு இத்திட்டம் நிறைவேறிய சில வருடங்களிலேயே அவற்றின் மூலம் வருமானத்தில் திரும்ப கிடைக்கும் என்பது நிச்சயம். நதிநீர் இணைப்பின் மூலம் நாட்டின் வளமும் அண்டை மாநிலத்தின் நட்புறவும் வளரும் என்பது ஐயமில்லை.

மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் நதிநீர் இணைப்பிற்காண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News