செய்திகள்

ராமநாதபுரம் அருகே 100 ஆண்டு பழமை வாய்ந்த அதிசய கூந்தல் பனைமரம்

Published On 2017-08-12 17:01 GMT   |   Update On 2017-08-12 17:01 GMT
ராமநாதபுரம் அருகே விவசாயியின் நிலத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த பனை மரம் கூந்தல் பனையாக மாறி உள்ளது. பூ பூத்து நறுமணம் வீசுகிறது.
கீழக்கரை:

கேட்டதை கொடுக்கும் தேவலோகத்து மரம் என்று அழைக்கப்படுவது பனை மரம். இது ஆண் பனை, பெண் பனை, கூந்தல்பனை, ஈச்சம்பனை, சீமைப்பனை, இளம்பனை, குடைப்பனை என நிலப்பரப்பு எங்கும் வளர்ந்து வருகிறது. பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன்தருவதால் இதனை கற்பகத்தரு என்றும் அழைக்கிறார்கள். பொதுவாக பனை மரங்களில் சுமார் 60 முதல் 70 வருடங்களுக்குபின் முதிர்ச்சி பெற்றதும் மரத்தின் மேல்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு இலைகளும், பூக்களும் வெளிவரும். இந்த பூக்களில் இருந்து காய்கள் காய்த்து கொத்து கொத்தாக கீழே கொட்டுவது வழக்கம்.

இவ்வாறு பூக்களில் இருந்து காய்கள் வெளியாகும்போது விதவிதமான ஒலிகள் ஏற்படும். முதிர்ச்சி அடைந்த பனைமரங்கள் இவ்வாறு விசிறி போன்ற குலைகள் தள்ளி, பூக்களுடன் காய்களை வெளித்தள்ளும் பனைமரத்தினை கூந்தல்பனை என்று அழைக்கின்றனர். பனைமரங்கள் அனைத்தும் இதுபோன்று கூந்தல்பனைமரமாக மாறுவது கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிசயமாக இதுபோன்ற கூந்தல்பனை மரங்கள் இருப்பதை காணமுடிகிறது.

இவ்வாறு ராமநாதபுரம் அருகே நொச்சிவயல் பூத்தோப்பு பகுதியை சேர்ந்த ஒரு விவசாயியின் நிலத்தில் வளர்ந்துள்ள பனை மரங்களில் சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த பனை மரம் கூந்தல் பனைமரமாக மாறி உள்ளது. இந்த பனை மரத்தின் மேல்பகுதியில் மெல்லிய இலைகள் வளர்ந்து பூ பூத்து நறுமணம் வீசி அந்த வழியாக செல்பவர்களை கவர்ந்திழுத்து வருகிறது.

கூந்தல் பனை மரத்தில் இருந்து வெளியாகும் காய்கள் மருத்துவ குணம் மிக்கதாக கருதப்படுவதால் இதனை ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து செல்வதுடன் காய்களை எடுத்து சென்று வருகின்றனர். பெரும்பாலும் இதுபோன்ற முதிர்ச்சியடைந்த பனைமரங்கள் கூந்தல்பனையாக மாறுவதால் இதனை தெய்வீக மரம் என்றும் ஆன்மிக நம்பிக்கையாளர்கள் கருதி வருகின்றனர். இதுபோன்ற அதிசய கூந்தல்பனை மரம் உத்தரகோசமங்கை அருகே உள்ள வெள்ளா கிராமத்திலும், கீழக்கரை அருகேயும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News