செய்திகள்

ஆட்சேபனை மனுக்கள் நிராகரிப்பு: இரோம் ‌ஷர்மிளாவுக்கு ஆக.16-ந் தேதி திருமணம்?

Published On 2017-08-12 05:23 GMT   |   Update On 2017-08-12 05:23 GMT
ஆட்சேபனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் இரோம் ‌ஷர்மிளாவுக்கு ஆக.16-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொடைக்கானல்:

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்தை எதிர்த்து போராடியவர் இரோம் ‌ஷர்மிளா. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக போராட்டத்தை கைவிட்டு தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அதன்பிறகு பல்வேறு ஊர்களுக்கு சென்ற அவர் கடந்த 3 மாதமாக கொடைக்கானலில் தங்கி உள்ளார்.

அவருடன் லண்டனை சேர்ந்த அவரது காதலர் தேஸ்மந்த்கொட்டின்கோவும் உள்ளார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இவர்கள் திருமணத்தை கொடைக்கானலில் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் அவ்வாறு அனுமதித்தால் கொடைக்கானல் போராட்ட களமாக மாறிவிடும் என பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன், இந்து மக்கள் கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி ஆகியவை சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்குள் ஆட்சேபனை உள்ளவர்கள் மனு அளிக்கலாம் என சார்பதிவாளர் அறிவித்திருந்தார். இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து சார் பதிவாளர் அளித்துள்ள பதில் மனுவில் தனித்திருமண சட்டத்தின்கீழ் நடக்க இருக்கும் திருமணத்தை நிபந்தனை மீறலுக்காக மட்டுமே மறுக்க இடம் உண்டு. எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் ஆட்சேபனைகள் நிபந்தனை மீறல் என்ற அடிப்படையில் அமையவில்லை.

தொடர்பு இல்லாத வேறு காரணங்களே அவர்களால் கூறப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆட்சேபனை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் இரோம் ‌ஷர்மிளா திருமணம் வரும் 16-ந் தேதி கொடைக்கானலில் நடைபெறும் என்றும் இதற்காக தேவாலயத்தில் அனுமதி கோரப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News