செய்திகள்

நீலப்புரட்சி திட்டத்தால் மீனவர்களின் பிரச்சனைகள் குறையும்: ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

Published On 2017-07-27 08:39 GMT   |   Update On 2017-07-27 08:39 GMT
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நீலப்புரட்சி திட்டத்தினால் குறையும் என ராமேஸ்வரத்தில் நடந்த கலாம் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
ராமநாதபுரம்:

ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பு கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் மண்டபம் அருகே நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். ‘நண்பர்களே வணக்கம்’ என தமிழில் கூறி உரையை தொடங்கினார் மோடி. தொடர்ந்து அவர் பேசியதாவது:-

பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு வழிகாட்டும் புனித மையமாக ராமேஸ்வரம் திகழ்கிறது. புனித தலமான ராமேஸ்வரம் வந்ததை என் பாக்கியமாக கருதுகிறேன். ராமேஸ்வரம் ஒரு மதத்தின் மையமாக மட்டும் இருக்கவில்லை, ஆன்மீக வழியாகவும் திகழ்கிறது. டாக்டர் அப்துல் கலாம் மூலம் மேலும் புகழ்பெற்ற இடமாக ராமேஸ்வரம் மாறி உள்ளது. அவர் ஆழமான, அமைதியான சிந்தனை கொண்டவர்.

இந்த நினைவகத்தை மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடித்திருப்பது அரசாங்கத்திற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இரவு-பகல் பாராமல் தொழிலாளர்கள் இந்த பணியை செய்து முடித்துள்ளனர். ஜெயலலிதா நம்மிடையே இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அவர் இருந்திருந்தால் இந்த பணியை மிகப்பெரிய அளவில் பாராட்டியிருப்பார். மணிமண்டப பணிகளுக்கு துணைபுரிந்த ஒவ்வொரு பணியாளருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்றத்தை ஏற்படுத்தும் அரசு டெல்லியில் அமைந்துள்ளது. நாட்டு மக்கள் பின்னால் இருப்பதே மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதற்கு காரணம்.

பசுமை ராமேஸ்வரம் திட்டத்தால் இந்த பகுதி மேலும் மேம்படும். மக்களின் பல ஆண்டு கனவான தனுஷ்கோடி சாலை திறந்துவைக்கப்பட்டுளள்து. கடல்வழி போக்குவரத்து திட்டத்தினால் கடற்கரை வாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி சாதனங்களை வழங்கி உள்ளதால் மீனவர்களின் பிரச்சனைகள் குறையும். நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டுள்ளது. கடல் போக்குவரத்தை மேம்படுத்த நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சாகர் மாலா திட்டத்தின் மூலம் ராமேஸ்வரம் மக்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்க முடியும்.

இளைஞர்கள் மீது கலாம் மிகுந்த பற்று வைத்திருந்தார். எனவே நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வித்திட வேண்டும். இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்துதான் அதிக இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளனர். தமிழக முன்னேற்றத்திற்காக மாநில அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டுகிறேன். தமிழகம் முன்னேற்றப் பாதைக்கு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.

வளர்ச்சி அடைந்த இந்தியாவை காண்பதே கலாமின் கனவு. அதனை 75-வது சுதந்திர தினத்தில் நாம் நிறைவேற்றியாக வேண்டும். தமிழகத்தில் இருந்து 8 லட்சம் வீடுகளுக்கான கோரிக்கை வந்துள்ளது. தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்தால் 8 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News