செய்திகள்

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது உறுதி: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2017-07-27 06:34 GMT   |   Update On 2017-07-27 06:34 GMT
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைவது உறுதி என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில், 29-ந் தேதி (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. விழாவுக்காக செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகே பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. விழாவில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இரண்டு அணிகள் இணைவது 100 சதவீதம் உறுதியான தகவல்தான். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளோம். அவரும் பரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி மோகன் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் உள்பட கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவண்ணாமலையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பேரணியை தாலுகா அலுவலகத்தில் இருந்து கலெக்டர் பிரசாந் மு.வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிகுழுவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.
Tags:    

Similar News