செய்திகள்

புதுவை அனைத்து கட்சி குழு 30-ந்தேதி டெல்லி பயணம்

Published On 2017-07-25 09:46 GMT   |   Update On 2017-07-25 09:46 GMT
புதுவை மாநில கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக அனைத்து கட்சி குழு வருகிற 30-ந் தேதி டெல்லி செல்கிறது.
புதுச்சேரி:

புதுவை கவர்னராக கிரண்பேடி வந்ததில் இருந்து அவர் தனக்குத்தான் அதிக அதிகாரம் இருப்பதாக கூறி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பதாக ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக பாரதிய ஜனதாவை சேர்ந்த 3 பேர் நியமிக்கப்பட்டனர். புதுவை அரசுக்கே தெரியாமல் இந்த நியமனம் நடந்தது. கவர்னரின் சிபாரிசின் பேரில் மத்திய அரசு இவர்களை நியமித்ததாக கூறப்பட்டது.

எனவே, கவர்னரை எதிர்த்து புதுவையில் போராட்டங்கள் வெடித்தன. முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்படது. அப்போதே இது சம்பந்தமாக காங்கிரஸ் தலைமையில் அனைத்து கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், கவர்னரின் செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதி மற்றும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களிடம் புகார் அளிப்பது என்று முடிவு செய்தனர்.

அதன்படி புகார் தெரிவிப்பதற்காக அனைத்து கட்சி குழு வருகிற 30-ந் தேதி டெல்லி செல்கிறது. இதில், காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ராஷ்டீரிய ஜனதா தளம், படைப்பாளி கட்சி, சிந்தனையாளர் கட்சி, இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புகள் இடம் பெறுகின்றன.

முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் செல்லும் இந்த குழுவில் அனைத்து அமைச்சர்களும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், அனைத்து கட்சி தலைவர்களும் இடம்பெறுகிறார்கள்.

30-ந்தேதி டெல்லி செல்லும் அவர்கள் 31-ந்தேதி, அடுத்த மாதம் 1-ந்தேதி, 2-ந் தேதி ஆகிய 3 நாட்கள் டெல்லியிலேயே தங்கி இருந்து ஒவ்வொரு தலைவர்களையும் சந்திக்கிறார்கள்.

ஜனாதிபதியை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளனர். பிரதமரை சந்திப்பதற்கும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

உள்துறை மந்திரியை சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறார்கள். அடுத்ததாக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து புதுவையில் உள்ள நிலைமைகளையும், கவர்னரின் செயல்பாடுகளையும் விளக்குகிறார்கள்.

மேலும் இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்பி உரிய தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டு கொள்கிறார்கள்.

டெல்லி செல்லும் அனைத்து கட்சி குழுவில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் இடம்பெறவில்லை. அவர்களுக்கு அழைப்பும் அனுப்பப்படவில்லை.
Tags:    

Similar News