செய்திகள்

கொடுங்கையூர் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

Published On 2017-07-23 10:14 GMT   |   Update On 2017-07-23 10:14 GMT
கொடுங்கையூரில் கடந்த 15-ந்தேதி நள்ளிரவு பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

பெரம்பூர்:

கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் பேக்கரி கடை நடத்தி வந்தவர் ஆனந்தன்.

கடந்த 15-ந்தேதி நள்ளிரவு பேக்கரி கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கடையின் ‌ஷட்டரை உடைத்த போது உள்ளே இருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

இதில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் உள்ளிட்ட 48 பேர் படுகாயம் அடைந்தனர். தீவிபத்தை வேடிக்கை பார்த்தவர்களும், செல்போனில் படம் பிடித்தவர்களும் அதிகமானோர் இதில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் தீயணைப்பு வீரர் ஏகராஜன், பேக்கரி கடை உரிமையாளர் ஆனந்தன் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

நேற்று மாலை கொடுங்கையூர் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (36) செம்பியம், முகுந்தம்மன் நகரை சேர்ந்த பாஸ்கர் (38) ஆகியோர் இறந்தனர். இதனால் பேக்கரி தீவிபத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் தீ விபத்தில் காயம் அடைந்து ராயபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் (27) இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவரது சொந்த ஊர் மதுராந்தகம்.

எலக்ட்ரீசியனான பார்த்திபன், கொடுங்கையூரில் அண்ணன் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். பேக்கரியில் தீவிபத்து ஏற்பட்டபோது அவர் வேடிக்கை பார்க்க சென்று உள்ளார். சிலிண்டர் வெடித்து சிதறியபோது தீயில் பார்த்திபன் சிக்கிக் கொண்டார். அவருக்கு 60 சதவீதம் தீக்காயம் இருந்தது.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 12 பேருக்கும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 10 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.

எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. லேசான காயம் அடைந்தவர்கள் பலரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பேக்கரி கடை தீ விபத்தில் இதுவரை பலியானவர்கள் விவரம் வருமாறு:-

1. ஏகராஜன் (தீயணைப்பு வீரர்)

2. பரமானந்தன்

3. அபிமன்யூ (கொடுங்கையூர் கண்ணதாசன் நகர்)

4. ஆனந்தன் (பேக்கரி கடை உரிமையாளர்)

5. மகிழவன் (கொடுங்கையூர்)

6. கண்ணன் (கொடுங்கையூர் சோலையம்மன் தெரு),

7. பாஸ்கர் (செம்பியம்)

8. பார்த்திபன் (மதுராந்தகம்)

பார்த்திபன் பலியானது குறித்து அவரது அண்ணன் லோகநாதன் கூறியதாவது:-

எனது வீட்டில் தங்கி பார்த்திபன் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தான். வார விடுமுறை நாட்களில் சொந்த ஊரான மதுராந்தகத்துக்கு சென்று விடுவது வழக்கம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு செல்ல இருந்தான். ஆனால் அன்று அக்காள் ஒருவர் குழந்தையுடன் வீட்டுக்கு வருவதாக இருந்தது. இதனால் பார்த்திபன் ஊருக்கு செல்லவில்லை. நள்ளிரவு பேக்கரி கடையில் தீவிபத்து ஏற்பட்டபோது அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

அப்போது சிலண்டர் வெடித்ததில் பார்த்திபனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பலியான பார்த்திபனுக்கு இன்னும் திருமணம ஆக வில்லை. இச்சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News