செய்திகள்

மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு ஐகோர்ட்டில் நளினி வழக்கு

Published On 2017-07-22 08:06 GMT   |   Update On 2017-07-22 08:06 GMT
மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நாளை மறுநாள் சென்னை ஐகோர்ட்டில் நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாக வக்கில் தெரிவித்துள்ளார்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி நளினி, வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நளினியை, அவரது வக்கீல் புகழேந்தி இன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சுமார் 1 மணி நேரம் சந்தித்து பேசினார்.

பிறகு, பெண்கள் ஜெயில் வளாகத்தில் நிருபர்களை சந்தித்து வக்கீல் புகழேந்தி பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி கடந்த 13.6.1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஜெயிலிலேயே பிரசவித்தார். நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஹரித்ரா என்று பெயரிட்டார்.

இலங்கையில் உள்ள உறவினர்கள் மூலம் தனது குழந்தையை வளர்த்தார். தற்போது நளினியின் மகளுக்கு 26 வயதாகிறது. லண்டனில் அவர் இருக்கிறார். மகள் ஹரித்ரா திருமணத்திற்கு தயாராகியுள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைக்க நளினி முடிவு செய்துள்ளார்.

அதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் 12-ந் தேதி பரோல் கேட்டு நளினி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். மேலும் சிறைத்துறை தலைவருக்கும் பரோல் கேட்டு முறையிட்டார். ஆனால், பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, ஜெயிலில் நளினி உண்ணாவிரதம் இருந்தார். வேலூர் ஜெயிலில் இருந்து தன்னை சென்னை ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார். இந்த நிலையில், மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நாளை மறுநாள் (திங்கட் கிழமை) சென்னை ஐகோர்ட்டில் நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளது.

வழக்கு விசாரணை வரும் புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்படும். ஜெயிலில் பல ஆண்டுகளாக உள்ள தண்டனை பெற்ற கைதிகள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

அதேபோல், நளினி உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என்று எதிர் பார்த்தோம். ஆனால், விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, வேலூர் ஆண்கள் ஜெயிலில் உள்ள நளினியின் கணவர் முருகனை சந்திக்க வக்கீல் புகழேந்தி சென்றார்.
Tags:    

Similar News