செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் 1 அடி உயர்வு

Published On 2017-07-10 10:33 GMT   |   Update On 2017-07-10 10:33 GMT
கர்நாடகா மற்றும் கேரளாவில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் அந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

இது படிப்படியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை ஆயிரத்து 912 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை இது மேலும் அதிகரித்து 2 ஆயிரத்து 657 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 20.9 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 20.48 அடியாக உயர்ந்தது. இன்று 21.9 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

காவிரியில் வரும் நீர் வரத்தை தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்ப் பாசன துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News