செய்திகள்

மாதவரம் - சிறுசேரிக்கு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டம்

Published On 2017-07-09 10:45 GMT   |   Update On 2017-07-09 10:45 GMT
மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டமாக ரூ. 85,047 கோடி செலவில் மாதவரம் - சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை:

ரூ. 85 ஆயிரம் கோடி செலவில் 2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

80 சதவீதம் சுரங்க பாதையில் மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் இந்த வழித்தடம் அமையும்.

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரையில் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. திருமங்கலம்- நேருபூங்கா வரையில் 8 கி.மீட்டர் சுரங்க பாதையில் ரெயில் சேவை நடந்து வருகிறது.இந்த ரெயில் சேவைக்கு பொது மக்களிடம் பெரிதும் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.

மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டமாக ரூ. 85,047 கோடி செலவில் மாதவரம் - சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வழித்தடபாதை 107 கி.மீட்டர் கொண்டதாகும். இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. ரெயில் நிலையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த வழித்தடத்தில் 80 சதவீதம் சுரங்க பாதையாகவும் 20 சதவீதம் உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இந்த மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடபாதை மாதவரம் - சிறுசேரி, கோயம்பேடு- ஆயிரம் விளக்கு, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

இந்த வழித்தடம் மாதவரத்தில் 3 லைன் தண்டவாள பாதை கொண்டதாக அமையும்.

மத்திய- மாநில அரசுகளின் ஒப்புதல் அனுமதிக்காக இந்த திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் இப்பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இது குறித்து மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் திட்டத்தின் மேலும் ஒரு சாதனை நிகழ்வாக 2-வது வழித்தட பாதை மாதவரம்- சிறுசேரிக்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 85,047 கோடி மதிப்பீட்டில் தயாராகும் இந்த திட்டத்துக்கு மத்திய -மாநில அரசுகளின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும். பயணிகள் நுழைவுபாதை, ரெயில் நிலையங்கள், கட்டிடங்கள் அமைப்பதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கபட உள்ளது.

வடசென்னை மாதவரம் பகுதிகளில் அதிகமான குடோன் பகுதிகள் இருப்பதால் நிலம் கையகப்படுத்துவதுஎளிதாக அமையும் மாதவரம் - சிறுசேரி வழித்தடம் மாதவரத்தில் தொடங்கி கோயம்பேடு, தி.நகர் ஜி.என்.டி. சாலைவழியாக மயிலாப்பூர் சிட்டி சென்டர் வழியாக பூமிக்கடியில் சென்று சிறுசேரியை அடையும்.

இதற்கான முதற்கட்ட ஆய்வுபணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகளின் அனுமதி கிடைத்ததும் கட்டுமானத்துக்கான டெண்டர் பணிகள் விடப்பட உள்ளது.

80 சதவீதம் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு ரெயில் ஓடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News