செய்திகள்

கோவில்பட்டியில் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு: தீப்பெட்டி ஆலைகள் மூடல்

Published On 2017-07-01 10:20 GMT   |   Update On 2017-07-01 10:20 GMT
கோவில்பட்டியில் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இயங்கிவந்த 1000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கோவில்பட்டி:

மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீத வரி விதிப்பு செய்துள்ளது. இந்திய அளவில் தீப்பெட்டி உற்பத்தியில் 85 சதவீதம் அளவு தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர்,சிவகாசி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது.

300-க்கும் மேற்பட்ட பகுதி நேர எந்திர தீப்பெட்டி ஆலைகளும், 20-க்கும் மேற்பட்ட முழு நேர எந்திர தீப்பெட்டி ஆலைகளும், இவற்றை சார்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகிறது. ஏற்கனவே மூலப்பொருள்களின் விலை உயர்வு, சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்த தீப்பெட்டி தொழிலுக்கு மற்றொரு பிரச்சினையாக மத்திய அரசு தற்போது விதித்துள்ள 18 சதவீத வரி ஜி.எஸ்.டி வரி விதிப்பு உருவெடுத்துள்ளது என்று தீப்பெட்டி ஆலை அதிபர்கள் கூறியுள்ளனர்.

ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும், பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கான வரி விதிப்பில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதனை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்காக இன்று முதல் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

இதனால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், கழுகுமலை, கடம்பூர், எட்டயபுரம், இளையரசனேந்தல், வானரமுட்டி பகுதிகளில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மேலும் தினமும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது தவிர வெளி மாநிலம் செல்லக்கூடிய ஆர்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாக நே‌ஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம், செயலாளர் சேதுரத்தினம் ஆகியோர் தெரிவித்தனர்.


Tags:    

Similar News