செய்திகள்

தொண்டர்களின் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார் தம்பிதுரை: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

Published On 2017-06-26 09:28 GMT   |   Update On 2017-06-27 03:30 GMT
தொண்டர்களின் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார் பாராளுமன்ற மக்களவை துணை தலைவர் தம்பிதுரை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
நல்லம்பள்ளி:

தர்மபுரியை அடுத்துள்ள அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் அருகே ஓ.பி.எஸ்., அணி கட்சி அலுவலகத்தை நேற்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசியல் சூழ்ச்சி காரணமாக 2 அணிகளாக பிரிந்துள்ளது. இதனை தொடர்ந்து கழக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றுவருகிறது. 2 அமைப்பாக இருந்ததை தொடர்ந்து ஒன்று சேர்க்கும் வகையில் வேண்டுகோள் அடிப்படையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் அவர்களிடம் 2 கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதில், அம்மா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரனை மேற்கொள்ள வேண்டும். சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்பதே தங்கள் இயக்கத்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது. அதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டது.

இதற்கிடையே டெல்லியில் பாராளுமன்ற மக்களவை துணை தலைவர் தம்பிதுரை கட்சி தொண்டர்களின் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்.

அவர் 4-ம் தர அரசியலில் செயல்படுவதை தாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது தலைமை கழகம் எனவும் அறிவித்துள்ளார். ஆனால் சசிகலா, டி.டி.வி.தினகரனின் ஆசியோடு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு 2 அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்திருப்பதை சுட்டி காட்டினார்.

இரண்டு அணிகளும் இணைந்தால் தற்போது இருக்கிற வாழ்வு கிடைக்காது. இதனால் டி.டி.வி. தினகரன், ஜெயகுமார், சசிகலா, திவாகரன் ஆகியோர் மறைமுகமாக செயல்படுகின்றனர். அதேபோல் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது தொடர்பாக அவரவர்கள் அளித்த பிரமாண பத்திரத்தில், தாங்கள் அளித்தது உண்மையாக இருக்கும்.

அதேபோல் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தங்களிடம் ஆதரவு கேட்டுக் கொண்டதை அடுத்து அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளோம். எதிர்க்கட்சி நிர்பந்தம் காரணமாக காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது.

தற்போது நடக்கும் ஆட்சியில் அம்மா கொண்டுவந்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி அரசு செயலற்ற அரசாக உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைக்க மத்திய அரசு தன்னிச்சியாக செயல்படமுடியாது. சிலர் ஆட்சி கலைந்துவிடும் என கூறுவது ஒரு யூகம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News