செய்திகள்

செவ்வாப்பேட்டையில் மதுபான தொழிற்சாலையில் ஆசிரியை போராட்டம்

Published On 2017-06-24 07:28 GMT   |   Update On 2017-06-24 07:28 GMT
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் மதுபான தொழிற்சாலையில் ஆசிரியை போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாப்பேட்டை:

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் தனியார் மதுபான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஒரு மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் மதுபாட்டில்கள் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா நகரை சேர்ந்த நர்மதா என்பவர் தனியார் மதுபான தொழிற்சாலைக்குள் திடீரென புகுந்தார். மதுபானத்தை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும் அங்கிருந்த மது பாட்டில்களை அவர் உடைக்க முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை பிடித்து வெளியே கொண்டு வந்தனர். மதுபான ஆலையின் வெளிப்புற கதவை தாண்டி அவரை சாலைக்கு கொண்டு வந்தனர்.


ஆனால் அவர் நுழைவு வாயில் மீது ஏறி உள்ளே செல்ல முயன்றார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நர்மதாவை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

விசாரணையில் அவர் தனியார் பள்ளியின் ஆசிரியையாக பணி புரிவது தெரிய வந்தது. நர்மதாவின் தந்தை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குடிபழக்கத்தால் உயிர் இழந்தார். இதனால் அவர் மதுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார் என்று தெரிய வந்தது.

Tags:    

Similar News