செய்திகள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர ஆர்வம் குறைந்தது: 13 ஆயிரம் இடங்களுக்கு 1,400 பேர் மட்டுமே விண்ணப்பம்

Published On 2017-06-22 02:26 GMT   |   Update On 2017-06-22 02:26 GMT
இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. மொத்தம் உள்ள 13 ஆயிரம் இடங்களுக்கு 1,400 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் 48 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 34 அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 321 சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் மொத்தம் 13 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் சேர பிளஸ்-2 படித்திருக்க வேண்டும். பயிற்சி காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர கடந்த (மே மாதம்) 31-ந்தேதி முதல் ஆன் லைன் மூலம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் நேற்று வரை 1,400 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளதால், விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான விவரங்களுக்கு www.tnsc-ert.org என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

10 வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பை உடனுக்குடன் பெற்று வந்தனர். அதன்பிறகு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் குறைவாக உள்ளன.

இப்படி பல காரணங்களால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர மாணவ-மாணவிகளிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இதன் காரணமாக பல ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. பல பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. 
Tags:    

Similar News