செய்திகள்

களியக்காவிளை அருகே ஆம்னி பஸ்சில் இங்கிலாந்து நாட்டு கள்ள நோட்டுகள் சிக்கின

Published On 2017-06-20 03:32 GMT   |   Update On 2017-06-20 03:32 GMT
களியக்காவிளை அருகே ஆம்னி பஸ்சில் இங்கிலாந்து நாட்டு கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக சிக்கின. இதுதொடர்பாக ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
களியக்காவிளை:

பெங்களூரில் இருந்து குமரி மாவட்டம் வழியாக திருவனந்தபுரத்தை நோக்கி நேற்று முன்தினம் ஒரு ஆம்னி பஸ் சென்றது. அந்த பஸ்சை களியக்காவிளை அருகே அமரவிளை சோதனைச்சாவடியில் கேரள வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, பஸ்சில் இருந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் போலீசாரை கண்டதும் எழுந்து ஓட முயன்றார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அந்த பையில் கத்தை கத்தையாக இங்கிலாந்து நாட்டு பணமான ‘பவுண்டு’ நோட்டுகள் இருந்தன.

மேலும் அவரிடம் பண நோட்டுகள் அளவில் வெட்டப்பட்ட காகிதங்கள், மை பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. எனவே வெளிநாட்டுப்பணம் கள்ளத்தனமாக இங்கு அச்சிடப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. எனவே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ரோப் எடிசன் என தெரியவந்தது. அவரிடம் இருந்த விசா 2015-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டதும், அதன்பின்பு, விசாவை அவர் புதுப்பிக்காமல் இந்தியாவிலேயே தங்கி இருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும் வெளிநாட்டு பணத்தை கள்ளநோட்டுகளாக இந்தியாவில் அச்சடித்து, இங்குள்ள பணபரிவர்த்தனை ஏஜென்சி மூலம், இந்திய பண மதிப்பில் மாற்றி மோசடி செய்து வந்தது தெரிந்தது. இங்கிலாந்து பவுண்டு பணத்தை கள்ள நோட்டுகளாக அச்சடித்து, பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்தில் மாற்றுவதற்காக வந்தபோது தான் அவர் சிக்கினார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News