செய்திகள்

மாட்டு இறைச்சி தடைக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

Published On 2017-06-17 03:19 GMT   |   Update On 2017-06-17 03:19 GMT
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கைக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் மத்திய அரசு தடை விதித்து உள்ளது. அத்துடன் மாடுகள் விற்பனை தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை வகுத்து இருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

மக்களின் உணவு சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம்சாட்டி இருக்கும் எதிர்க்கட்சிகள், இந்த தடையை திரும்பப் பெறவேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றன.

மத்திய அரசின் தடைக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி சட்டசபையில் நேற்று விலங்குகள் வதை தடுப்பு மற்றும் கால்நடை விற்பனை விதிமுறைகளை திரும்பப்பெறுதல் தொடர்பான அரசினர் தீர்மானத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மாதம் 23-ந் தேதி விலங்குகள் வதை தடுப்பு, கால்நடை விற்பனை விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த விதிமுறைகள் கால்நடை வளர்ப்போரின் உரிமையை பறிப்பதாகும். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக உள்ளது.

மத்திய அரசு தனி மனித சுதந்திரத்தில் தலையிட்டு மாட்டுக்கறி, ஒட்டகக்கறி, எருமைக்கறி போன்றவைகளை உண்ணக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரெஞ்சு கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ள புதுச்சேரி மக்கள் அவரவர் உண்ணும் உணவிற்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது.

புதுச்சேரியின் அனைத்து தரப்பு மக்களும் மத்திய அரசாணையை எதிர்த்து குரல் கொடுத்து உள்ளனர். எனவே மத்திய அரசின் கால்நடை விற்பனை விதிமுறைகளை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

தீர்மானத்தின் மீது பேசிய அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., மத்திய அரசின் உத்தரவு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதுபோல் உள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து இந்த தீர்மானத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் குரல் வாக்கெடுப்புக்கு விட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

Tags:    

Similar News