செய்திகள்

போச்சம்பள்ளியில் டாஸ்மாக் கடைக்கு பெண்கள் பூட்டு போட்டு போராட்டம்

Published On 2017-05-27 17:02 GMT   |   Update On 2017-05-27 17:02 GMT
போச்சம்பள்ளியில் டாஸ்மாக் கடைக்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்த பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது அரசம்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் அருகருகே 2 அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 2 டாஸ்மாக் கடைகளின் இடைப்பட்ட பகுதியில் மகளிர் மன்றம் அமைந்துள்ளது. இந்த மகளிர் மன்றத்தில் உறுப்பினராக உள்ள போச்சம்பள்ளி, அரசம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மகளிர் மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வது வழக்கம்.  அப்போது அவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சுய தொழில், குறைந்த வட்டியில் கடன் உதவி, பெண்கள் மேம்பாடு ஆகியவை குறித்து கலந்துரையாடுவார்கள்.

அந்த சமயத்தில் மது குடித்து விட்டு அந்த வழியாக வரும் குடிமகன்கள் போதை தலைக்கேறிய நிலையில் மகளிர் மன்றம் முன்பு விழுந்து கிடப்பதாகவும்,  பெண்களை கேலி, கிண்டல் செய்வதாகவும் புகார் எழுந்தது. இதனால் அந்த 2 டாஸ்மாக் கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனக்கோரி நேற்று மகளிர் மன்றத்தை சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் என 100-க்கும்  மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து 2 டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு போட்டு  போட்டனர். மேலும் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரசம்பட்டியில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சின்னசாமி, போச்சம்பள்ளி தாசில்தார் பண்டரிநாதன் ஆகியோர் விரைந்து வந்து பெண்களிடம் சமாதானம் செய்து, இது பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்தனர்.
Tags:    

Similar News