செய்திகள்

பாலைவனம் போல் காட்சி அளிக்கும் பூண்டி ஏரி

Published On 2017-05-24 06:39 GMT   |   Update On 2017-05-24 06:39 GMT
பூண்டி ஏரியில் இன்று காலை நிலவரப்படி வெறும் 45 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் 95 சதவீதம் தண்ணீர் வற்றிவிட்டதால் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
ஊத்துக்கோட்டை:

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளில் 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

பருவ மழை பொய்த்து போனதாலும், கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வரத்து நின்று போனதாலும், சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் 4 ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

கடந்த மாதமே சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டது. இன்று காலை நிலவரப்படி 417 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் ஒருசில நாட்களுக்கு மட்டுமே சென்னையில் குடிநீர் வினியோகிக்க முடியும்.

பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 45 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

ஏரியில் இருந்து சென்னை மெட்ரோ வாட்டார் போர்டுக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஏரி 95 சதவீதம் வற்றிவிட்டதால் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.



இதனால் சென்னை மெட்ரோ வாட்டர் போர்டுக்கு தண்ணீர் திறப்பு சில நாட்களில் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் வற்றியதால் ஏரியில் மீன்பிடி தொழில் இல்லாமல் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீன் பிடிப்புக்கு பயன்படுத்திய படகுகள் அப்படியே விட்டு விட்டதால் ஏரியில் எங்கு பார்த்தாலும் படகுகளாக காணப்படுகின்றன.

இதேபோல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடும் மதகுகள், குசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும் ‌ஷட்டர்கள் பகுதிகளும் வறண்டு காணப்படுகின்றன.


Tags:    

Similar News