செய்திகள்

ஆத்தூர் அருகே ஜெயலலிதா டிரைவர் மர்ம மரணம்: மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் டிரைவர் கைது

Published On 2017-04-30 04:34 GMT   |   Update On 2017-04-30 04:34 GMT
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதிய கார் டிரைவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்திரம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 36).

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தார். இவரது நடவடிக்கை சரியில்லாததால் கடந்த 2012-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

2014-ம் ஆண்டு வடபழனியை சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணை கனகராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. அதன் பிறகு சொந்தமாக கார் வாங்கி கனகராஜ் அதனை வாடகைக்கு ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி நடந்த கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவத்தில் கனகராஜ் மூளையாக செயல்பட்டது தனிப்படையினரின் விசாரணையில் தெரிய வந்தது. அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகராஜ் மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான எடப்பாடி சித்திரம்பாளையத்திற்கு வந்தார். பின்னர் சித்தப்பா மகளுக்கு குழந்தை பிறந்ததை பார்க்க நேற்று முன்தினம் ஆத்தூருக்கு சென்றார்.

குழந்தையை பார்த்து விட்டு நண்பர் விஜி என்பவரின் மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் புறவழிச்சாலையில் சென்றதாகவும், அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு கார் மோதியதில் கனகராஜ் இறந்ததாகவும் ஆத்தூர் போலீசார் கூறினர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிளில் பதிவெண் ஏதும் இல்லாதது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனகராஜ் மீது மோதிய கார் பெங்களூருவில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்றது. இதில் பெரம்பலூரை சேர்ந்த பிச்சைமணியின் மனைவி மல்லிகா (40) அவரது மாமியார் மற்றும் 2 குழந்தைகள் காரில் இருந்தனர்.

காரை தம்மம்பட்டியை சேர்ந்த ரபீக் (27) என்பவர் ஓட்டி வந்தார். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதும் காரினுள் இருந்த ஏர்பேக் வெளியேறியதால் காரில் வந்தவர்கள் உயிர் தப்பினர்.

இதையடுத்து கார் டிரைவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது பொதுப்பாதையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், விபத்தில் உயிர் பலி ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News