செய்திகள்

தமிழகம் முழுவதும் பஸ் மறியல்: 30 ஆயிரம் பேர் கைது- வெறிச்சோடிய ரங்கநாதன் தெரு

Published On 2017-04-25 10:15 GMT   |   Update On 2017-04-25 10:15 GMT
தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டு சுமார் 30 ஆயிரம் பேர் கைதானார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை:

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நடத்திய பந்த் போராட்டத்தில் கடை அடைப்பு, பஸ் மறியல் காரணமாக பரபரப்பு நிலவியது.

போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்ட பஸ்களை மறித்தும், போக்குவரத்து பணிமனைகள் முன்பு திரண்டும் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்களும், மற்ற கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

32 மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட தலைநகரங்களில் முக்கிய சந்திப்புகளில் திரண்ட அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து பஸ் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் மறியலில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டு சுமார் 30 ஆயிரம் பேர் கைதானார்கள்.

பந்த் போராட்டத்துக்கு வணிகர்கள் அளித்த ஆதரவே மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. தி.நகர், பாண்டிபஜார், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் முக்கிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சாலையோர தள்ளுவண்டி கடைகாரர்களும் தங்களது கடைகளை மூடி ‘‘விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்களும்’’ என்கிற வாசகத்தை ஒட்டி வைத்திருந்தனர்.


எப்போதும் பரபரப்பாக காணப்படும் தி.நகர் ரங்கநாதன் தெருவிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் வெறிச்சோடி காணப்பட்ட ரங்கநாதன் தெரு கிரிக்கெட் மைதானமாக மாறி இருந்தது. கடை ஊழியர்கள் அங்கு கிரிக்கெட் விளையாடினர். வடக்கு உஸ்மான் ரோடு, தெற்கு உஸ்மான்ரோடு உள்ளிட்ட பகுதிகளும் இன்று வெறிச்சோடியே காணப்பட்டன. இதனால் இன்று சென்னை மாநகரில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. பஸ்களிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Similar News