செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2017-04-22 06:05 GMT   |   Update On 2017-04-22 06:05 GMT
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்திற்கு நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு முறையில் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. இந்த நீட் தேர்வு முறையால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர்வதிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு கிடைத்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கான தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தால் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிக்கவும், கிராமப்புற அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு உரிய 50 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்கிடவும் மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இன்று (சனிக்கிழமை) டெல்லி செல்லும் தமிழக முதல்-அமைச்சர் பிரதமரை சந்திக்க இருக்கிறார்.

பிரதமரைச் சந்திப்பதற்கு முன்பாக அங்கு போராடிக் கொண்டிருக்கின்ற தமிழக விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகே பிரதமரை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளின் அவசியத்தை அழுத்தத்துடன் எடுத்துக்கூற வேண்டும்.

முக்கியமாக விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

அதன் அடிப்படையில் 37 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி, டெல்லியிலேயே காத்துக்கிடக்கின்ற விவசாயிகளுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் நியாயம் கிடைக்க வேண்டும். தமிழக விவசாயிகள் நிம்மதியாக தமிழகம் திரும்ப வேண்டும்.

மேலும் தமிழகத்திற்கான வறட்சி நிவாரணம், நீட் தேர்வுக்கு விலக்கு, ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Similar News