செய்திகள்

முள்புதரில் கிடந்த பெண் குழந்தையை தேடி வந்த தாய்: குழந்தையை தருமாறு போலீசாரிடம் கெஞ்சல்

Published On 2017-03-30 10:10 GMT   |   Update On 2017-03-30 10:10 GMT
திண்டிவனம் பயணியர் விடுதி அருகே முள்புதரில் கிடந்த பெண் குழந்தையை போலீசார் தூக்கி சென்றதால் போலீசாரிடம் குழந்தையை தருமாறு தாய் கெஞ்சியதால் பரிதாபமாக இருந்தது.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பயணியர் விடுதியின் பின்புறம் பிறந்து 10 நாட்களே ஆன பெண்குழந்தை முள்புதரில் கிடந்தது. அழுகுரல் கேட்டு பயணியர் விடுதி காவலாளி துரைராஜ் அங்கு வந்து பார்த்தார். பின்னர் திண்டிவனம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த குழந்தையை போட்டுவிட்டு சென்றவர் யார்? என்று பெண் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திண்டிவனம் பயணியர் விடுதியின் பின்புறம் குழந்தை கிடந்த இடத்தில் ஒரு பெண்ணும், அவரது தந்தையும் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டபோது அந்த பெண் தனது பெண் குழந்தையை பயணியர் விடுதியின் அருகே போட்டு விட்டு சென்றதாக தெரிவித்தார்.

குழந்தையை ஏன் இங்கு போட்டுவிட்டு சென்றாய் என்று அந்த பெண்ணிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவள். எனது பெயர் ராஜேஸ்வரி(வயது 26). எனது கணவர் பெயர் குட்டியப்பன். அவர் கட்டிட தொழிலாளியாக உள்ளார்.

எங்களுக்கு 3½ வயதில் தீட்சா என்ற பெண் குழந்தை உள்ளது. எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

எனவே என் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன். என்னை சமாதானப்படுத்தி என் கணவர் வீட்டில் என் பெற்றோர் விட்டு சென்றனர்.

நான் மீண்டும் கர்ப்பமானேன். மேல்மருவத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எனக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. என் கணவருக்கு தகவல் சொல்லி அனுப்பினோம் ஆனால் அவர் குழந்தையை பார்க்க வரவில்லை.

2-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அவர் பார்க்க வரவில்லையோ என நான் நினைத்து மனம் வருந்தினேன். எனவே மேல்மருவத்தூர் ஆஸ்பத்திரியில் இருந்து என் குழந்தையுடன் திண்டிவனம் வந்தேன். இங்குள்ள பயணியர் விடுதி அருகே இரவு நேரத்தில் மஞ்சள் நிறத்துண்டில் என்குழந்தையை வைத்து விட்டு நான் சென்று விட்டேன்.

சேத்துப்பட்டு பகுதியில் உள்ள என்பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். அவர்கள் குழந்தை எங்கே என்று கேட்டனர். அதற்கு நான் பயணியர் விடுதி அருகே குழந்தையை போட்டு விட்டு வந்துவிட்டேன் என்று தெரிவித்தேன். என்னை அவர்கள் திட்டினார்கள். பின்னர் என் தந்தை மணியுடன் எனது குழந்தையை தேடி இங்கு வந்தேன். பயணியர் விடுதி அருகே குழந்தையை தேடினேன் குழந்தையை அங்கு காணவில்லை.

இவ்வாறு போலீசாரிடம் ராஜேஸ்வரி கூறினார்.

உடனே போலீசார் அவரிடம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் பெண் குழந்தை உள்ளது. அது உன் குழந்தைதானா என்று பார்த்து சொல் என்று கூறினர்.

பின்னர் மகளிர் போலீஸ்நிலையத்துக்கு சென்ற ராஜேஸ்வரி அங்கிருந்த பெண் குழந்தையை பார்த்து அது என்னுடைய குழந்தைதான் என்று கூறினார். அந்த குழந்தையை என்னிடம் ஒப்படையுங்கள் என்று போலீசாரிடம் கெஞ்சி கேட்டார்.

அதற்கு அவர்கள் இதுஉன்னுடைய குழந்தைதான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. இந்த குழந்தையை விழுப்புரத்தில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவோம். நீ உன்னுடைய குழந்தைதான் என்பதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பித்து உன் குழந்தையை கொண்டு செல்லலாம் என்று தெரிவித்தனர்.

இதனால் கண்ணீர் சிந்தியபடி ராஜேஸ்வரி தனது தந்தையுடன் சேத்துப்பட்டு பகுதிக்கு புறப்பட்டு சென்றார். அவர் ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த பின் பெண் குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

Similar News