செய்திகள்
பலா மரத்தின் இடுக்கில் கால் சிக்கி தவறிவிழுந்து இறந்த யானை.

பலாப்பழம் பறிக்க சென்ற யானை தவறி விழுந்து உயிரிழப்பு

Published On 2017-03-30 04:59 GMT   |   Update On 2017-03-30 04:59 GMT
பாலக்காட்டில் பலாப்பழம் பறிக்க சென்ற யானையின் வலது கால் பலாமரத்தின் இடுக்கில் சிக்கியதால், அப்படியே மல்லாந்த நிலையில் விழுந்தபோது தலையில் பலத்த காயம் அடைந்து யானை உயிரிழந்தது.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ளது அகழி ஊராட்சி.

இங்குள்ள சோலையூர் என்ற கிராமத்திற்கு விரடி மலைப்பகுதியில் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை புகுந்து விளைநிலங்களை நாசப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை உணவு தேடி அந்த யானை ஊருக்குள் புகுந்தது. ஊருக்குள் இருந்த பலா மரங்களில் பலாப்பழம் காய்த்து தொங்கியது. பலா மரத்தில் காய்த்திருந்த பலாப்பழத்தை பறிக்க யானை முயன்றது. ஆனால் உயரத்தில் இருந்த பலா பழங்களை யானையால் பறிக்க முடியவில்லை. பலாபழங்களை பறிக்க முயன்றது.

அப்போது நிலைதடுமாறி யானை தவறி விழுந்தது. விழும்போது பலாமரத்தின் இடுக்கில் வலது கால் சிக்கி முறிந்தது. அப்போது மல்லாந்த நிலையில் விழுந்தபோது அதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விழுந்த சிறிது நேரத்தில் யானை துடிதுடித்து அங்கேயே பரிதாபமாக இறந்தது.

இது குறித்து வனத்துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி ஷெரீப், கால் நடை டாக்டர் ரெஜிமோன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது யானை தவறி விழுந்ததில் இருதயத்திற்கு செல்லும் ரத்தகுழாய் அறுந்து விட்டதால் யானை இறந்ததாக டாக்டர் கூறினார். யானையின் 2 தந்தங்களையும் வெட்டி எடுக்கப்பட்ட பின்னர் யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.



Similar News