செய்திகள்

சீமைக்கருவேல மரங்களை அகற்ற வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் செலுத்திய வைகோ

Published On 2017-03-28 07:07 GMT   |   Update On 2017-03-28 07:07 GMT
சீமைக்கருவேல மரங்களை அகற்ற உயர்நீதி மன்ற பதிவாளர் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரத்தை வைகோ செலுத்தினார். இதுவரை இந்த கணக்கில் ரூ.2½ வரை சேர்ந்துள்ளது.
மதுரை:

தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிதி பற்றாக்குறை காரணமாக இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு நிதி திரட்டும் வகையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளர் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இதில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நிதி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.

கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட நீதிபதி ஏ.செல்வம், முதன் முதலாக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் என பலரும் அந்த கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர். கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி வழக்கு தொடர்ந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பதிவாளர் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரத்தை டெபாசிட் செய்தார்.

உயர்நீதிமன்ற கிளையின் மூத்த வக்கீல்கள் அஜ்மல்கான் ரூ.25 ஆயிரம், காந்தி, சாமிதுரை தலா ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்துள்ளனர்.

நீதிபதிகள் பலர் தாங்கள் விசாரிக்கும் வழக்குகளில் விதிக்கப்படும் அபராத தொகையை மேற்கண்ட வங்கி கணக்கில் செலுத்துமாறு உத்தரவிட்டு வருகின்றனர். அதன்படி தற்போது வரை சீமைக்கருவேல மரங்களை அகற்ற தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.2½ லட்சம் வரை சேர்ந்துள்ளதாக தெரிகிறது.

Similar News