செய்திகள்
பிரையண்ட் பூங்காவில் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்.

கோடை வெயில், விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2017-03-26 09:19 GMT   |   Update On 2017-03-26 09:19 GMT
வார விடுமுறை மற்றும் வெயில் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவி வரும். ஆனால் தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாகவும், மழை இல்லாததாலும் கடும் வறட்சி நீடித்து வருகிறது. கடந்த வாரம் கோடை மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்தது.

வார விடுமுறை என்பதாலும் பிற பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் அதில் இருந்து தப்பிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். காலை நேரத்தில் இதமான சீதோஷ்ணம், அதனைத் தொடர்ந்து வெயில் அடிக்கிறது.

மாலை நேரங்களில் ரம்யமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த சமயத்தில் சுற்றுலா இடங்களான பிரையண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். தற்போது தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

சீசன் தொடங்குவதற்கு முன்னோட்டமாக சுற்றுலா பயணிகள் வருகையால் அந்த தொழிலை நம்பியுள்ள கைடுகள், ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரம் பெய்தது போல் மழை தொடர்ந்து பெய்தால் இந்த வருடம் சீசன் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News