செய்திகள்

கருவேல மரங்களை அகற்ற தவறினால் 2 மடங்கு அபராதம்: திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

Published On 2017-02-27 09:29 GMT   |   Update On 2017-02-27 09:29 GMT
தங்கள் நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற தவறினால், அரசு துறைகளே அதை அகற்றி உரியவர்களிடமிருந்து அதற்கான தொகையை இரு மடங்காக அபராதம் வசூலிக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின்படி சீமை கருவேல மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி, வருவாய், நகராட்சி, பேரூராட்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணி, வனத்துறை, இந்து சமய அறநிலைய துறை, கால்நடை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையினர் தத்தம் பொறுப்பில் உள்ள நிலங்களிலிருந்து மார்ச் 15-ந் தேதிக்குள் முற்றிலுமாக சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டு உள்ளது.

அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்களும் சீமை கருவேல மரங்களை பற்றிய கணக்கெடுப்பு செய்து அதை மார்ச் 1ம் தேதிக்குள் அறிக்கையாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.

சீமை கருவேல மரங்களை அகற்றுவதால், நிலத்தடி நீர் ஆதாரம் உயரும். பொது மக்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை மார்ச் 20-ந் தேதிக்குள் வேரோடு அகற்ற வேண்டும்.

அவ்வாறு தங்கள் நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற தவறினால், அரசு துறைகளே அதை அகற்றி உரியவர்களிடமிருந்து அதற்கான தொகையை இரு மடங்காக அபராதம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News