செய்திகள்

கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்த எம்.எல்.ஏ அதிரடி பேட்டி

Published On 2017-02-13 15:48 GMT   |   Update On 2017-02-13 15:48 GMT
சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதியிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாக மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா மற்றும் முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

சசிகலா தனக்கு 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்று கூறி ஆட்சியமைக்க உரிமை கோரி  ஆளுநரை வலியுறுத்தி வருகிறா்ர. சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க தயார் என்று பன்னீர் செல்வம் கூறி வருகிறார்.

சமீபத்தில் சசிகலாவை ஆதரித்து பேட்டியளித்து வந்த சிலர் தற்போது அணிமாறி ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு 11 அ.தி.மு.க. எம்.பி்.க்களுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தனர். மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான சரவணன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு இன்றிரவு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தையும் சேர்த்து சசிகலாவுக்கு எதிரான அணியின் எம்.எல்.ஏ.க்கள் பலம் தற்போது எட்டாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரவனன் எம்.எல்.ஏ, சசிகலாவிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியிலிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் தனது உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Similar News