செய்திகள்

எம்.எல்.ஏ-க்கள் குடும்பத்துடன் மிரட்டப்படுகின்றனர் - சசிகலா ஆவேசம்

Published On 2017-02-13 14:57 GMT   |   Update On 2017-02-13 14:57 GMT
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களால், அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் குடும்பத்துடன் மிரட்டப்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா கூவத்தூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பாக இருக்கும் நிலையில், சென்னை கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களுடன் மூன்றாவது நாளாக இன்றும் ஆலோசனையில் ஈடுபட்ட சசிகலா, இன்று இரவு அங்கேயே தங்குவதாக முடிவெடுத்துள்ளார். ஆலோசனைக் கூட்டங்கள் முடிவடைந்த பின்னர், சசிகலா பேசியதாவது:-

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை இந்தக் கட்சியை யாராலும் அசைக்க முடியவில்லை. ஆனால், இன்று ஜெயலலிதா இல்லாத நேரம் என்பதால் கட்சியைப் பிளக்க தி.மு.க. கணக்கு போடுகிறது. பன்னீர் செல்வம் கட்சியின் முக்கிய நபர் என்பதால் அவரை வைத்து கட்சியை பிரிக்க தி.மு.க. சதி செய்கிறது.

ஜெயலலிதாவை அன்று எந்தக் காரணத்திற்கு எதிர்த்தார்களோ, அதே காரணத்திற்காகதான் இன்று  என்னை எதிர்க்கின்றனர். சோதனைக் காலங்களில் கட்சியை திறம்பட வழிநடத்தியவர் ஜெயலலிதா, அதே போல தற்போதும் நான் செயல்படுவேன். இன்னும், நான்கரை ஆண்டுகள் ஆட்சிக் காலம் மீதமுள்ளது, நாங்கள் தான் ஆட்சி செய்வோம். முதல்வர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களால், அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர்.

நான் பதவியேற்றதும் உலகமே வியக்கும் வண்ணம் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்படும், மேலும், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் கோலாகலமாக கொண்டாடப்படும் 

இவ்வாறு சசிகலா பேசினார்.

Similar News