செய்திகள்

திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேகம்: 1600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2017-02-02 09:11 GMT   |   Update On 2017-02-02 09:11 GMT
திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேகத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,600 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, வரும் 6-ந் தேதி (திங்கட்கிழமை) வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.

இன்று காலை 5 மணிக்கு பரிவார யாக சாலை பூஜைகள் தொடங்கின. 7.35 மணிக்கு பூர்ணாஹூதி, 8.05 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

பிறகு, பிரகாரங்களில் உள்ள அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

கம்பத்திளையனார் சன்னதி, கோபுரத்திளையனார் சன்னதி, பாதாள லிங்கம், சம்மந்தவிநாயகர் சன்னதி, காள பைரவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து, 4-ம் கால யாகசாலை பூஜை, மாலை 4.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) 6-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.இதைத் தொடர்ந்து, 7-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

வருகிற 6-ந் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ராஜகோபுரம், மூலஸ்தானம், அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் விமானங் களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை யொட்டி 6-ந் தேதி மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாகும். அதற்கு பதிலாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகும்.

கும்பாபிஷேகத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 12 இடங்களில் தற்காலிகமாக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. நகர எல்லையில் நான்கு இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

கும்பாபிஷேகத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,600 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, சேலம், பெங்களூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 5-ந்தேதி மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பக்தர்களின் வருகைக்கு ஏற்றபடி தேவைப்பட்டால் அதற்கு அடுத்த நாளும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News