செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தி.மு.க.வினர் ரெயில் மறியல்

Published On 2017-01-20 05:55 GMT   |   Update On 2017-01-20 05:55 GMT
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சேலம்:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

இதையொட்டி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஜங்சன் ரெயில் நிலையத்தில் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில் ஆத்தூரில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்ககிரி ரெயில் நிலையத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் ரெயில் மறியல் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேற்கு மாவட்ட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு ஓசூரில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுகவனம் தலைமையில் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.

நாமக்கல் ரெயில் நிலையம் முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய மந்திரி காந்தி செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே போல நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன் தலைமையில் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் பள்ளிப்பாளையம் அருகே உள்ள காவேரி ரெயில் நிலையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.

Similar News