செய்திகள்

சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் பயிர்கள் கருகியதால் 3 விவசாயிகள் பலி

Published On 2017-01-07 09:16 GMT   |   Update On 2017-01-07 09:16 GMT
சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் பயிர்கள் கருகியதால் 3 விவசாயிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள மூலக்குறிச்சியை சேர்ந்தவர் கவுரவ மீனாட்சி (வயது 55). விவசாயியான இவருக்கு தங்காயி என்ற மனைவியும், பழனியம்மாள், லோகேஸ்வரி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இதில் பழனியம்மாளுக்கு திருமணமாகிவிட்டது.

கொளவ மீனாட்சி தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் சுமார் 2 ஏக்கரில் ஏற்கனவே மரவள்ளி கிழங்கை பயிரிட்டிருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அதனை அறுவடை செய்த போது பெரும்பாலும் மரவள்ளி பயிர்கள் காய்ந்து இருந்ததால் 35 மூட்டை மரவள்ளி கிழங்குகள் மட்டுமே கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது மழை இல்லாதாலும், கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாததாலும் தற்போது பயிரிட்டிருந்த மரவள்ளி கிழங்கும் கருக தொடங்கியது. இதை பார்த்து மனவேதனை அடைந்த அவர் மீண்டும் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ? என்று மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

கவுரவ மீனாட்சி நேற்று மதியம் அவரது நிலத்திற்கு பக்கத்து நிலத்துக்காரரான ஊராட்சி தலைவர் மாணிக்கத்தின் தந்தை குப்பன் என்பவரிடம் இது குறித்து மனம் உடைந்த நிலையில் பேசினார். அப்போது கொளவ மீனாட்சிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

இது பற்றி விவசாயிகள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் கூறியது:- மழை இன்றி தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயி கவுரவ மீனாட்சி பயிரிட்டு இருந்த மரவள்ளி கிழங்கு பயிர்கள் காய்ந்து போனதால் அவர் மன வேதனையில் இருந்தார். 2 ஏக்கரில் சுமார் 300 மூட்டை மரவள்ளி கிழங்கு விளைச்சல் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் 35 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் இருந்த தால் விவசாயி கவுரவ மீனாட்சி மனமுடைந்து கவலையுடன் இருந்தார். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

உயிரிழந்த விவசாயி கொளவ மீனாட்சி குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்கி அவரது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றார். இது பற்றி தகவல் அறிந்த வருவாய்துறை மற்றும் ஆயில் பட்டி போலீசார் இறந்த விவசாயியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

சேலம் மாவட்டம் கெங்க வல்லியை அடுத்த கூடமலை ஊராட்சி பேளூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செங்கோடன் (வயது 75). இவருக்கு அந்த பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் தற்போது மஞ்சள் மற்றும் கத்தரிக் காய் பயிரிட்டிருந்தார். போதுமான தண்ணீர் இல்லாததாலும், மழை பெய்யாததாலும் இந்த பயிர்கள் கருகியது. இதனால் மன வேதனையில் அவர் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று தோட்டத்திற்கு சென்றவர் சிறிது நேரத்தில் வீடு திரும்பினார். அப்போது நெஞ்சை பிடித்த படி மகன் செல்லப்பனிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.

அவர் தண்ணீர் கொண்டு வருவதற்குள் மயங்கி விழுந்து இறந்தார். பயிர்கள் கருகியதால் மன வேதனை அடைந்த அவர் இறந்தது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்து போன செங்கோடனுக்கு காந்தாயி என்ற மனைவியும், செல்லப்பன், மாணிக்கம் என்ற 2 மகன்களும் உள்ளனர். இவர்களும் விவசாயம் செய்து வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே தாமனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). விவசாயியான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், மணிவண்ணன் என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர்.

இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கரில் தென்னை மற்றும் பாக்கு மரங்கள் பயிரிட்டுள்ளார். மீதம் உள்ள 2 ஏக்கரில் நெல் மஞ்சள் பயிரிட்டிருந்தார். ஏற்கனவே கிருஷ்ண மூர்த்தி வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே நிலத்தில் உள்ள 80 அடி ஆளமுள்ள கிணற்றிலும் தண்ணீர் இல்லாததாலும், மழை இல்லாததாலும் பயிர்கள் கருக தொடங்கியது. இதனால் அடிக்கடி வயலுக்கு சென்ற வந்த அவர் மனம் உடைந்த நிலையில் இருந்தார். இதற்கிடையே திடீரென வீட்டில் சுருண்டு விழுந்து இறந்தார்.

இதை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News