செய்திகள்

படகுகளை விடுவிக்க கோரிய வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-12-09 11:16 GMT   |   Update On 2016-12-09 11:16 GMT
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
மதுரை:

ராமநாதபுரம் திருவாடானையைச் சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறி இருப்பதாவது:-

ராமநாதபுரம், ராமேசுவரம், எஸ்.பி.பட்டினம், தொண்டி, நம்புதாளை, சோழியகுடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகபட்டினம் ஆகிய பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மீன்பிடி தொழில் ஆகும்.

சமீப காலமாக இலங்கை கடற்படையினர் மீனவர்களை கடுமையாக தாக்குவது மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை சேதப்படுத்தி, பறிமுதல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 120 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றில் 80 படகுகள் ராமேசுவரம் மீனவர்களுடையவை. ஒவ்வொரு படகும் 30 லட்ச ரூபாய் மதிப்புடையவை.

கடந்த நவம்பர் 11-ம் தேதி தமிழக முதல்வர் இலங்கை கடற்படையினர் கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் 105 படகுகளை விடுவிக்கவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், இதுவரை அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

எனவே இலங்கை கடற்படையினரின் பிடியிலிருக்கும் 120 மீன்பிடி படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், கலையரசன் அடங்கிய அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Similar News