செய்திகள்
கைக்குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தனுஜா.

இரணியல் அருகே கணவருடன் சேர்த்து வைக்க கோரி கைக்குழந்தையுடன் பெண் போராட்டம்

Published On 2016-12-09 10:52 GMT   |   Update On 2016-12-09 10:53 GMT
இரணியல் அருகே கணவருடன் சேர்த்து வைக்க கோரி கைக்குழந்தையுடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரணியல்:

நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பெரும் செல்வவிளை பஜனை மடம் பகுதியைச் சேர்ந்தவர் தாணுகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவரது மகள் தனுஜா (வயது 23).

இவருக்கும், இரணியல் அருகே உள்ள கக்கோடு பகுதியைச் சேர்ந்த வினோத் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. வினோத் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்த தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் நேற்று கக்கோட்டில் உள்ள தனது கணவர் வீட்டு முன்பு தனுஜா தனது கைக்குழந்தையுடன் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தனுஜாவுடன் அவரது தாயாரும் போராட்டத்தில் பங்கேற்றார்.

உண்ணாவிரதம் குறித்து தனுஜா கூறுகையில் பெண் குழந்தை பிறந்ததால் என்னை கணவர் ஏற்க மறுக்கிறார். எனவே அவர் என்னையும், எனது குழந்தையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை உண்ணாவிரதத்தை தொடருவேன் என்றார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் இரணியல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து தனுஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர், கணவருடன் தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டேன் என்றார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று அவர் இரணியல் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு அவரது கணவரும் வரவழைக்கப்பட்டார். 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை குளச்சல் மகளிர் போலீஸ் நிலையம் சென்று பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

Similar News