செய்திகள்

சோனியா காந்தியுடன் நாராயணசாமி சந்திப்பு

Published On 2016-12-09 10:21 GMT   |   Update On 2016-12-09 10:21 GMT
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் இன்று காலை சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது சோனியாகாந்திக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து சோனியாகாந்தி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நேரம் கிடைத்த பின்னர் தன்னை மீண்டும் சந்திக்கும்படி நாராயணசாமியிடம் அறிவுறுத்தினார்.

முன்னதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை நாராயணசாமி சந்தித்தார். அப்போது புதுவையில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்கு பிரான்ஸ் அரசு ரூ.1400 கோடி தருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

மேலும் திட்டமில்லா செலவினங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு ரூ.567 கோடி நிதி மட்டுமே ஒதுக்கி உள்ளதாகவும் இதனை கூடுதலாக 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும், நிலுவை தொகையினை கடந்த 5 ஆண்டுகளுக்கு ரூ.600 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Similar News