செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: விழுப்புரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றனர்

Published On 2016-12-08 10:08 GMT   |   Update On 2016-12-08 10:08 GMT
திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் புறப்பட்டு சென்றனர்.
விழுப்புரம்:

திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிவார்கள்.

இதனால் திருவண்ணா மலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் சென்றுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மதிவாணன், கோமதி உள்பட 4 டி.எஸ்.பி.க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள், 75 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

Similar News