செய்திகள்

தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2016-12-07 10:25 GMT   |   Update On 2016-12-07 10:25 GMT
கச்சத்தீவு புதிய தேவாலய திறப்பு விழாவில் தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை:

தமிழர் தேசிய முன்னனியின் இளைஞரணி செயலர் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ராமேசுவரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த தீவு 1974ல் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றாமல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவில் 1905ல் தமிழகத்தைச் சேர்ந்த சீனி குப்பன் பட்டன்கட்டியார், அந்தோணி பிள்ளை ஆகியோர் இணைந்து புனித அந்தோணியார் ஆலயத்தை கட்டினர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3 நாள் அந்தோணியார் ஆலய விழா நடைபெறும். இவ்விழாவில் தமிழகத்தில் இருந்து மீனவர்களும், பக்தர்களும் 35 நாட்டுப்படகுகள், 106 இயந்திர படகுகளில் பங்கேற்பது வழக்கம்.

இரு நாட்டு பங்குதந்தைகள் இணைந்து திருப்பலிகள் நடத்துவார்கள். தற்போது அந்தோணியார் விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுகிறது.

கச்சத்தீவு உண்மையில் தமிழகத்துக்கு சொந்தமானது. நாடாளுமன்றத்தில் அனுமதி பெறாமல் 1974ல் இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. அப்போது அந்தோணியார் விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்கலாம், கச்தத்தீவில் தங்கலாம், மீன்படி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற ஒப்பந்தத்தின் பேரில் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழர்கள் 111 ஆண்டுக்கு முன்பு கச்சத்தீவில் கட்டிய பழங்கால தேவாலயத்தை இடித்து இலங்கை அரசு புதிய ஆலயம் கட்டியுள்ளது. புதிய ஆலயம் திறப்பு விழாவில் தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் 3 படகுகளில் தமிழகத்தில் இருந்து நூறு பக்தர்களை அனுமதிக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு பங்கு தந்தை கடிதம் அனுப்பி உள்ளார்.

எனவே கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் அரசிடம் இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Similar News