செய்திகள்

சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மழை நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2016-12-03 08:15 GMT   |   Update On 2016-12-03 08:15 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகள் மழை நீர்வரத்து அதிகரித்து உள்ளன.
ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகள் உள்ளன.

கடந்த ஆண்டு இதே நாளில் இந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. ஆனால் வட கிழக்கு பருவ மழை அக்டோபர், நவம்பரில் சரிவர பெய்யாததால் ஏரிகள் வறண்ட நிலையில் உள்ளன. 10-ல் 1 பங்கு தண்ணீர்தான் ஏரிகளில் உள்ளது.

இந்த சூழலில் வங்க கடலில் உருவான நடா புயலால் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் வலுவிழந்து கரையை கடந்து சென்று விட்டது.

இதனால் மிக அதிக மழை கிடைக்கவில்லை. மிதமான மழைதான் பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்வதால் குடிநீர் ஏரிகளுக்கு நேற்று முதல் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது.

இதில் பூண்டி ஏரி பகுதியில் 34 மி.மீட்டர் மழை பெய்துள்ளதால் ஏரிக்கு 310 கன அடி தண்ணீர் வருகிறது. கிருஷ்ணா தண்ணீர் 420 கன அடி வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியில் 285 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் கடந்த 27-ந் தேதி 71 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருப்பு இருந்தது. 6 நாட்களில் ஏரியின் நீர்மட்டம் 3.31 அடி உயர்ந்துள்ளது.

இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு ‘லிங்க்‘ கால்வாய் மூலம் வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பேபி கால்வாயில் வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது புழல் ஏரிக்கு 466 கன அடி மழை தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 377 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

சோழவரம் ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.இதே போல் வீராணம் ஏரிக்கும் 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கும் மழைநீர் வருவது ஆறுதலாக உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 69.7 மி.மீட்டர் மழையும் நுங்கம்பாக்கத்தில் 27.6 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

திருத்தணியில் 68 மி.மீட் டர், பூந்தமல்லியில் 56, செம்பரம்பாக்கத்தில் 59, திருவாலங்காட்டில் 44, தாமரைப்பாக்கத்தில் 39, பூண்டியில் 34, அம்பத்தூரில் 30, ஆர்.கே.பட்டில் 33 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

Similar News