செய்திகள்

ரூ.15 லட்சம் நிலத்தை மோசடி செய்து விற்றவர் கைது

Published On 2016-12-03 02:36 GMT   |   Update On 2016-12-03 02:36 GMT
காணாமல் போனவரின் ரூ.15 லட்சம் நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்:

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் லூகாஸ். இவரது மனைவி அன்னம்மாள். லூகாஸ் 2002-ம் ஆண்டு பாதிரிவேட்டை அடுத்த செதில்பாக்கம் கிராமத்தில் 4,142 சதுர அடியில் காலி நிலம் வாங்கினார். இந்தநிலையில் அவர் 2004-ம் ஆண்டு திடீரென காணாமல் போய்விட்டார்.

இதையடுத்து 2007-ம் ஆண்டு லூகாசின் நிலத்தை புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த முத்துக்குமரன் (வயது 48) என்பவர், ஆள் மாறாட்டம் செய்து நான்தான் லூகாஸ் எனக்கூறி, கதிரவன் என்பவருக்கு பொதுஅதிகாரம் கொடுத்தார். ரூ.15 லட்சம் மதிப்புள்ள அந்த நிலத்தை அவர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். இதை அறியாத அன்னம்மாள் அந்த நிலத்தை சென்று பார்வையிட்டபோது, அங்கு வேறு ஒருவர் வீடு கட்டிக்கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த நபரிடம் சென்று விசாரித்தார். அப்போதுதான் தங்களது நிலம் அபகரிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 2009-ம் ஆண்டு திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசில் அன்னம்மாள் புகார் அளித்தார்.

அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால், சப்-இன்ஸ்பெக்டர் லியோ பிரான்சிஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முத்துக்குமரன் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

Similar News