செய்திகள்

சேலம் அருகே பிரபல ரவுடி கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-12-02 05:41 GMT   |   Update On 2016-12-02 05:42 GMT
சேலம் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று காலை முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொலை குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சேலம்:

சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்ற புக்கு முருகன் (வயது 40).பிரபல ரவுடி.

இவர் மீது வீராணம் மற்றும் காரிப்பட்டி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 3 கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் முருகன் வீட்டிற்கு நேற்றிரவு தாதனூரை சேர்ந்த ஒருவர் வந்தார். அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த முருகனை அந்த நபர் ஆட்டோவில் அழைத்து சென்றார். அதன் பின்னர் நள்ளிரவு வரை முருகன் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகனின் தந்தை குப்புசாமி (72), மனைவி ராணி (35) மற்றும் மகன்கள் கிருபாகரன் (17) கவுதமன் (8) மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் இரவு முழுவதும் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை தாதனூர் பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்குள் ரத்த வெள்ளத்தில் முருகன் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

முருகனின் உடலில் தலை, கழுத்து உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்தும், வெட்டுக்காயங்களும், கழுத்து அறுக்கப்பட்டும் கொடூரமாக இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளதை அறிந்த அந்த பகுதியினர் வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்கப்பன், ராஜேந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இதற்கிடையே முருகனின் தந்தை குப்புசாமி, மனைவி ராணி மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் பிணமாக கிடந்த முருகனின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

பின்னர் பிணமாக கிடந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொலைக்கான காரணம் குறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு-

முருகனை நேற்றிரவு ஆட்டோவில் அழைத்து சென்ற தாதனூரை சேர்ந்த அந்த நபர் பாதி வழியில் இறக்கி விட்டார். அதன் பின்னர் மற்றொரு நபர் அவரை தாதனூரில் உள்ள பன்னீர் செல்வம் என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து ஒரு கும்பல் பல மணி நேரம் முருகனை கட்டையால் சரமாரியாக தாக்கினர். ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் கத்தியால் குத்தியும், அரிவாளாளும் வெட்டியது.

பின்னர் கழுத்தை அறுத்தும் முருகனை கொடூரமாக கொலை செய்த அந்த கும்பல் அருகில் உள்ள கோவில் கொட்டகையில் முருகன் உடலை வீசி விட்டு தப்பியோடியுள்ளனர்.

பன்னீர் செல்வம் வீட்டில் வைத்து முருகனை கொலை செய்த போது அங்குள்ள பெட்டில் ரத்தக்கறை படிந்ததால் தடயத்தை அழிக்கும் வகையில் அந்த பெட்டை கொலையாளிகள் தீ வைத்து எரித்துள்ளனர்.

கடந்த 1996-ம் ஆண்டு அயோத்தியாப்பட்டினம் ரெயில்வே கேட் அருகே கீரிப்பட்டியை சேர்ந்த முருகேசன், ரவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இந்த கொலை வழக்கில் முருகன் முக்கிய குற்றவாளியாவார்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் 10 ஆண்டு சிறைத்தண்டனைக்கு பிறகு நன்னடத்தை விதியின் கீழ் சிறையில் இருந்து வெளியில் வந்தார். இது தவிர காரிப்பட்டி யில் நடைபெற்ற கொலை வழக்கிலும் முருகனுக்கு தொடர்பு இருந்தது.

இந்த கொலைகளால் ஏற்பட்ட முன் விரோதத்தில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் முருகனால் கொலை செய்யப்பட்ட ரவியின் மகன் தினேஷ் பழிக்கு பழியாக இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை தேடி வருகிறார்கள்.

மேலும் பன்னீர்செல்வம் வீட்டிற்கு முருகனை அழைத்து சென்ற ஒருவரையும் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்ககள். விசாரணை முடிவில் மேலும் யார், யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று காலை முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News