செய்திகள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் காட்டெருமை தாக்கி காயமடைந்த சென்னை பெண் வக்கீல் மரணம்

Published On 2016-10-27 05:32 GMT   |   Update On 2016-10-27 05:32 GMT
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் காட்டெருமை தாக்கி காயமடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் வக்கீல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை:

சென்னை மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது 29). ஐ.டி. நிறுவன ஊழியர். இவரது மனைவி தாமரை(28). இவர் வக்கீலுக்கு படித்துள்ளார்.

இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது. கணவன், மனைவி இருவரும் காரில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு கடந்த 24-ந் தேதி குன்னூருக்கு வந்தனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இயற்கை அழகை ரசித்த தம்பதியினர் செல்போனில் செல்பி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது பூங்காவையொட்டிய வனப்பகுதியில் இருந்து காட்டெருமை ஒன்று பூங்காவுக்குள் புகுந்தது. செல்பி மோகத்தில் இருந்த தம்பதியினர் காட்டெருமையை கவனிக்கவில்லை. காட்டெருமை மிகவும் அருகில் வந்த போது தான் அதனை கண்ட தினேசும், தாமரையும் அலறியடித்த படி ஓடினார்கள். எனினும் காட்டெருமை அவர்களை விடாமல் துரத்தி முட்டி தள்ளியது. இதில் தாமரைக்கு வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தினேசும் படுகாயமடைந்தார்.

இருவரது அலறல் சத்தம் கேட்டு பூங்கா ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காட்டெருமையை விரட்டி இருவரையும் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தாமரைக்கு கல்லீரலில் காயமும், உடலில் பல இடங்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டிருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தாமரை சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாமாக இறந்தார். தினேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்பர் குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாமரை உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

சிம்ஸ் பூங்காவையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. தினமும் காலை, மாலை நேரங்களில் இந்த வனப்பகுதியில் காட்டெருமை புகுந்து அவ்வழியாக செல்பவர்களை தாக்குவது தொடர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதி வழியாக சென்ற தொழிலாளி, நடைப்பயிற்சி சென்ற 2 பேர் காட்டெருமை தாக்கி இறந்துள்ளனர். எனினும் பூங்காவுக்குள் காட்டெருமை புகுந்திருப்பது இது முதல் முறை ஆகும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பூங்காவையொட்டி வனப்பகுதி வழியாக விலங்குகள் வராமல் தடுக்கும் வகையில் வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News