செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்: ஆம்னி பஸ்-மணல் லாரிகளில் அதிரடி சோதனை நடத்த உத்தரவு

Published On 2016-10-25 05:06 GMT   |   Update On 2016-10-27 11:02 GMT
அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்கும் வகையில் ஆம்னி பஸ்-மணல் லாரிகளில் அதிரடி சோதனை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கரூர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. அதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணி தொடர்பாக அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் தேர்தல் செலவின பார்வையாளர் சில் ஆசிஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்கும் வகையில் 6 பறக்கும் படை, 6 நிலையான கண்காணிப்பு குழு 3 வீடியோ கண்காணிப்பு குழு, 1 வீடியோ பார்வையாளர் குழு, 22 மண்டல குழு என 177 நபர்கள் கொண்ட 38 குழுக்கள் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் வேட்பு மனு தாக்கல் மற்றும் வாக்குப்பதிவு காலம் நெருங்கி வருவதை ஒட்டியும் தற்பொழுது வேட்பாளர்கள் தேர்தல் பணியில் அதிக அளவு ஈடுபட்டுள்ளதை ஒட்டியும் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கும் வகையிலும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிக அளவு கவனமெடுத்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

பறக்கும் படை அலுவலர்கள் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், நிலையான கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட பகுதிகளில் ஆம்னி பேருந்துகள், மணல் லாரிகள், பயணிகள் பேருந்து, இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் தீவிரமாக தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் செலவின பார்வையாளர் சில் ஆசிஷ் கூறும் போது, அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்துள்ள ஏற்பாடுகள் திருப்திகரமான வகையில் உள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற முழு வீச்சில் பணியாற்றிட வேண்டும் என்றார்.

இதையடுத்து நடந்த அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் அச்சடிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி கண்டிப்பாக சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றில் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டபடிவத்தில் எத்தனை பிரதிகள் அச்சடிக்கப்பட்டது, அச்சடிக்கப்பட்டதற்கான கூலி ஆகிய விபரங்கள் கண்டிப்பாக தெரிவிக்கப்பட வேண்டும்.

தேர்தல் தொடர்பான துண்டு பிரசுரங்களை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள வரைமுறைகளானது சட்டத்திற்கு புறம்பாகவோ, மதம், சாதி மற்றும் இனம் தொடர்பான ஆட்சேபனைகள் எழும் விதத்திலும், மொழி மற்றும் தனிப்பட்ட நபரின் நன்னடத்தைகளை பாதிக்கும் வகையிலோ அச்சடிக்க கூடாது. மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளுக்குட்பட்டு சுவரொட்டி மற்றும் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Similar News