செய்திகள்

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Published On 2016-10-25 02:45 GMT   |   Update On 2016-10-25 02:46 GMT
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல்:

கரூர் மாவட்டம் உப்பிடமங்களம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 38), ஏ.சி. மெக்கானிக். இவருடைய மனைவி தங்கமணி (30). இவர்களுக்கு பூர்வி (4), சதீஷ் (2) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வாடகை வீட்டில் முருகன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி, மாலை 6 மணியளவில் தனது மனைவி, குழந்தைகளுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லில் இருந்து மோகனூர் வழியாக கரூருக்கு அவர் புறப்பட்டார்.

நாமக்கல் அருகே கணவாய்பட்டி பகுதியில் உள்ள நாமக்கல்-மோகனூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே மோகனூரில் இருந்து நாமக்கல் நோக்கி ஒரு தனியார் பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம்போல் நொறுங்கியது. அதில் வந்த முருகன், அவருடைய மனைவி தங்கமணி, அவர்களது குழந்தைகள் பூர்வி, சதீஷ் ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் மற்றும் மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

Similar News