செய்திகள்
கைதி சந்திரன்

ஆயுள் தண்டனை கைதி தப்பிய விவகாரம்: திருச்சி சிறைக்காவலர் சஸ்பெண்டு

Published On 2016-10-24 07:33 GMT   |   Update On 2016-10-24 09:14 GMT
ஆயுள் தண்டனை கைதி தப்பியது தொடர்பாக திருச்சி சிறைக்காவலர் ராம்குமாரை சிறை சூப்பிரண்டு நிகிலா ராஜேந்திரன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
திருச்சி:

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா முத்தமனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 46). இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று கடந்த 8.11.2004 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 21-ந்தேதி திருச்சி சிறை கைதிகள் சிறை முன்பு வளாகத்தில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மாலை நேரத்தில் மழை பெய்தது. அதை பயன்படுத்தி சந்திரன் சிறையில் இருந்து கைதி உடையுடன் தப்பி ஓடி விட்டார்.

கைதிகளை மீண்டும் சிறையில் அடைக்கும் போது சந்திரன் தப்பி ஓடியதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சந்திரனுக்கு சொந்த கிராமமான முத்தமனூரில் மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் திருமணம் தொடர்பாக சந்திரன் சக கைதிகளிடம் புலம்பி வந்துள்ளார்.

இந்த நேரத்தில் தான் அவர் தப்பி சென்றுள்ளார். எனவே சந்திரன் சொந்த கிராமமான முத்தமனூருக்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது. அவரை பிடிக்க சிவகங்கை மற்றும் அவரது மனைவி ஊரான தஞ்சாவூருக்கு 2 தனிப்படைகள் விரைந்துள்ளது.

கைதி சந்திரன் உறவினர்கள் செல்போன்களுக்கு பேசுகிறாரா என்பதை செல்போன் நிறுவனம் உதவியுடன் கண்காணித்து மடக்கி பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையே திருச்சி மத்திய சிறையில் கைதி சந்திரன் தப்பி ஓடிய சம்பவம் குறித்து சிறை சூப்பிரண்டு நிக்கிலா ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். சிறையில் இருந்து தோட்டவேலை போன்ற வேலைகளுக்கு செல்லும் கைதிகள் பாதுகாப்பிற்கு ஒரு ஏட்டு மற்றும் ரவுண்டு ஆபீசர் ஆகியோர் உடன் இருப்பது வழக்கம்.

ஒரு கேங்க் கொண்ட கைதிகள் குழுவில் 11 கைதிகள் இருப்பார்கள். இவர்களை ஏட்டு மற்றும் ரவுண்டு ஆபீசர்கள் கண்காணித்து கொண்டே இருப்பார்கள். 21-ந்தேதி திருச்சி மத்திய சிறையில் தோட்ட வேலையில் 10 கேங்க் கைதிகள் குழு வேலை பார்த்துக் கொண்டிருந்தது.

இதில் தப்பி ஓடிய சந்திரன் வேலையில் இருந்த குழுவை ராம்குமார் என்ற சிறை காவலர் (ஏட்டு) கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். சந்திரன் தப்பி ஓடியதை தடுக்க தவறியதால் ஏட்டு ராம்குமாரை நேற்று சிறை சூப்பிரண்டு நிகிலா ராஜேந்திரன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

மேலும் சிறை கைதிகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும்படியும் சிறை வார்டன்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News