செய்திகள்

ஓசூரில் மழை இல்லாததால் கருகும் விவசாய பயிர்கள்: நிவாரண உதவி வழங்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2016-10-20 17:51 GMT   |   Update On 2016-10-20 17:51 GMT
ஓசூரில் மழை இல்லாததால் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. இந்த பயிர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஓசூர் ஒன்னல்வாடி, தொரப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பெருமளவில் உள்ளனர். இங்கு விவசாய பயிர்களான ராகி, சோளம் மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பருவமழை தவறி விட்டதால் விவசாய பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராகி, நிலக்கடலை ஆகிய பயிர்கள் பெருமளவில் கருகி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விவசாய நிலங்களில், விவசாயிகள், ஆடு மாடுகளை மேய்க்க விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:–

மழையை நம்பி நாங்கள் ராகி, நிலக்கடலை பயிரிட்டுள்ளோம். தற்போது பருவமழை இல்லாததால் பயிர்கள் காய்ந்து கருகி விட்டன. இதனால் எங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடனை வாங்கி பயிர்களை சாகுபடி செய்த எங்களுக்கு நஷ்டமே மிஞ்சியது. எனவே எங்கள் பகுதியை வறட்சி பகுதிகளாக அறிவித்து, அதிகாரிகள் நிவாரண உதவி வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News