செய்திகள்

சேலம் அருகே மாயமான அ.தி.மு.க. நிர்வாகி கிணற்றில் பிணமாக மிதந்தார்

Published On 2016-10-20 09:36 GMT   |   Update On 2016-10-20 09:36 GMT
சேலம் அருகே மாயமான அ.தி.மு.க. நிர்வாகி கிணற்றில் பிணமாக மிதந்தார். ராஜா தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணத்தால் இறக்க நேரிட்டதா? என்றும் விசாரணை நடக்கிறது.

வாழப்பாடி:

சேலம் அருகே உள்ள பள்ளத்தாதனூர். பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 53). அ.தி.மு.கவை சேர்ந்தவர்.

இவர் அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளராகவும் இருந்தவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜா வெளியில் சென்று வருவதாக அவரது மனைவி செல்லம்மாளிடம் கூறி விட்டு வெளியில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதை அறிந்த அவரது உறவினர்களும், அ.தி.மு.க.வினரும் பல இடங்களில் ராஜாவை தேடிபார்த்தனர். ஆனால் அவர் எங்கும் இல்லை.

அவரது செல்போனும் வேலை செய்யவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ராஜாவை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் அங்கும் இல்லை.

இந்த நிலையில் ராஜாவின்வீட்டுக்கு அருகில் உள்ள தரை கிணற்றில் பிணம் ஒன்று மிதந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே ராஜாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் பிணம் கிடப்பது குறித்து வாழப்பாடி போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிணத்தை வெளியில் எடுத்தனர். அப்போது தான் இறந்து கிடந்தது ராஜா என தெரியவந்தது.

வெளியில் சென்று விட்டு ராஜா வீடு திரும்பும்போது கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று வாழப்பாடி போலீசார் கருதுகிறார்கள். பின்னர் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராஜா தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணத்தால் இறக்க நேரிட்டதா? என்றும் விசாரணை நடக்கிறது.

இறந்த ராஜாவின் மனைவி செல்லம்மாள் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாள்முதல் எனது கணவர் மனம் உடைந்து காணப்பட்டார். இதனால் அவர் முதல்-அமைச்சருக்காக தனது உயிரை தியாகம் செய்து இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News