செய்திகள்

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 80 அடியாக குறைந்தது

Published On 2016-09-29 04:12 GMT   |   Update On 2016-09-29 04:13 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 692 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 81.47 அடியாகவும் இருந்தது. இன்று நீர் வரத்து 733 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 80.49 அடியாகவும் சரிந்தது.
மேட்டூர்:

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அந்த தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து விட்டது.

இதையடுத்து நேற்று (28-ந் தேதி) முதல் நாளை (30-ந் தேதி) வரை 3 நாட்கள் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட உத்தரவிட்டது. அந்த தண்ணீரையும் கர்நாடக அரசு திறந்து விட வில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளது.

நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 692 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 81.47 அடியாகவும் இருந்தது. இன்று நீர் வரத்து 733 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 80.49 அடியாகவும் சரிந்தது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு பல மடங்கு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கும் மேல் சரிந்து வருகிறது.

கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து தற்போது 2995 கன அடியாகவும், அணையில் இருந்து 271 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. 120.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையில் தற்போது நீர்மட்டம் 88.5 அடியாக உள்ளது.

கபினி அணைக்கு நீர் வரத்து 2018 கன அடியாக உள்ளது. 550 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர் மட்டம் தற்போது 2270 அடியாக உள்ளது.

தென்மேற்கு பருவ மழை முடிய இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளதால் கர்நாடக அணைகளுக்கு இனி நீர் வருவதற்கு தற்போது வாய்ப்பு குறைவாக உள்ளது.

இதனால் இனி வரும் காலங்களில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் திறந்து விட்டாலோ, அல்லது வடகிழக்கு பருவமழை கை கொடுத்தாலோ? தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Similar News