செய்திகள்

கோட்டார் ஹவாலா மோசடியில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு: மனைவியின் ஊரில் தனிப்படை போலீசார் விசாரணை

Published On 2016-09-27 12:53 GMT   |   Update On 2016-09-27 12:53 GMT
கோட்டார் ஹவாலா மோசடியில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவரது மனைவியின் ஊரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில்:

கோவை அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.4 கோடி ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கரூர் மாவட்டம் பரமத்தி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முத்துக்குமார் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

முத்துக்குமாரை கைது செய்த போலீசார் அவருக்கு உதவிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு என மேலும் 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இக்கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்ற கோடாலி ஸ்ரீதர் என்பது தெரியவந்தது. தற்போது ஸ்ரீதர் தலைமறைவாக உள்ளார்.

ஸ்ரீதர் பற்றி கோவை போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் குமரி மாவட்டத்தில் இது போல பலமுறை ஹவாலா பண மோசடியில் சிக்கியவர் என தெரியவந்தது. ஸ்ரீதருக்கும், இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது பற்றி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முத்துக்குமார், பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு மாற்றலாகி வரும் முன்பு குமரி மாவட்டம் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அப்போது ஹவாலா பணம் கடத்திச் சென்றதாக ஸ்ரீதரை கைது செய்தார்.

இச்சம்பவத்திற்கு பிறகு ஸ்ரீதரும், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரும் நண்பர்களாக மாறி விட்டனர். ஸ்ரீதர் நடத்தும் ஹவாலா மோசடிக்கு முத்துக்குமார் பின்னணியில் இருந்து உதவி செய்தார். இதற்காக அவருக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டராக இருந்த முத்துக்குமார், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற பின்பும் ஸ்ரீதருடனான தொடர்பு நீடித்தது. குமரி மாவட்டத்தில் இருந்து கோவை, கரூர் பகுதிகளிலும் ஸ்ரீதர் ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டார்.

ஹவாலா பணம் கடத்திச் செல்லும் தகவலை ஸ்ரீதர், தெரிவிக்க அதனை முத்துக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீஸ் போர்வையில் சென்று பிடிப்பதும், அதில் கிடைக்கும் பணத்தை பங்கு போட்டு கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்தன.

இதையடுத்து முத்துக்குமார் எங்கெல்லாம் பணி புரிந்தாரோ அங்கெல்லாம் ஹவாலா மோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி முத்துக்குமார் குமரி மாவட்டத்தில் 2014-15-ம் ஆண்டில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்தபோது புதுக்கடை பகுதியில் ரூ.20 லட்சம் ஹவாலா மோசடி தொடர்பான புகாரையும், நாகர்கோவில் கோட்டாரில் நடந்த ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிபோன வழக்கையும் மீண்டும் விசாரிக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

கோட்டார் வழக்கில் பணம் பறிகொடுத்தவர்களை ஒரு கும்பல் போலீஸ் என கூறி கடத்தி வந்து கோட்டார் போலீஸ் நிலையம் அருகே இறக்கி விட்டு சென்றதாக கூறப்பட்டது. இந்த வழக்கிலும், இது போல நடந்த புதுக்கடை சம்பவத்திலும் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஹவாலா மோசடிக்கு துணை போனதன் மூலம் கிடைத்த பணம் மூலம் முத்துக்குமார் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக தெரிய வந்துள்ளது. முத்துக்குமாரின் மனைவியின் சொந்த ஊர் குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியாகும்.

இங்கு தான் முத்துக்குமார் பல சொத்துக்கள் வாங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே கோவையில் இருந்து நேற்று தனிப்படை போலீசார் குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் முத்துக்குமார் பணிபுரிந்த போலீஸ் நிலையங்கள் மற்றும் அவரது மனைவியின் ஊரான கொல்லங்கோடு பகுதிகளுக்கும் சென்று ரகசிய விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

முத்துக்குமாரின் மனைவிவழி உறவினர்கள் பலர் கேரளாவில் நகைக்கடை உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தி வருகிறார்கள். இவற்றிலும் முத்துக்குமார் ரகசியமாக பணம் முதலீடு செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Similar News