செய்திகள்

ஒட்டகம் இறந்த வழக்கு: 2 பேரின் முன்ஜாமீன் மனு விசாரணை 29-ந்தேதிக்கு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு கிளை உத்தரவு

Published On 2016-09-20 11:08 GMT   |   Update On 2016-09-20 11:51 GMT
ஒட்டகம் இறந்த வழக்கில் 2 பேரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 29-ந் தேதிக்கு தள்ளிவைத்த ஐகோர்ட்டு கிளை, அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டது.
மதுரை:

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டகம் வெட்டக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனை மீறி மதுரையில் ஒட்டகம் வெட்டியதாக கிழக்கு வெளிவீதியை சேர்ந்த ஆதம்பாவா, காலித் முகமது உள்பட 10 பேர் மீது நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதம் உள்ள 9 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆதம் பாவா, காலித் முகமது ஆகிய இருவரும் முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், குர்பானிக்காக வீட்டில் கட்டி இருந்த ஒட்டகத்தை கடந்த 12-ந்தேதி விளக்குத்தூண் போலீசார் கைப்பற்றினர். அதனை கேரளாவுக்கு கொண்டு சென்றபோது, போலீசார் துன்புறுத்தலால் ஒட்டகம் இறந்தது. இந்த வழக்கு பொய்யான வழக்கு. இதனால் எங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனு நீதிபதி கோகுல்தாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 29-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Similar News