செய்திகள்

கன்னடர்கள் தாக்குதல்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்வேன் - ஊர் திரும்பிய லாரி டிரைவர் பேட்டி

Published On 2016-09-20 08:09 GMT   |   Update On 2016-09-20 08:09 GMT
கர்நாடகாவில் நடைபெற்ற வன்முறையின் போது ஆடைகளை அவிழ்த்து தாக்கியது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக திருச்சி லாரி ஓட்டுனர் மணிவேல் தெரிவித்தார்.
திருச்சி:

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதை கண்டித்து கடந்த 12-ந் தேதி கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. அப்போது திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கல்பாறை கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மணிவேல் ( வயது33) ஆடைகளை அவிழ்த்து, கன்னடர்களால் தாக்கப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னடர்களின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் மணிவேல் தமிழகம் திரும்ப முடியாமல் கர்நாடகாவில் சிக்கி தவித்தார். எனவே தன்னை மீட்டு தமிழகத்துக்கு அழைத்து செல்ல முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என மணிவேல் வேண்டுகோள் விடுத்தார். அவரது மனைவி கனகவள்ளி உள்ளிட்ட குடும்பத்தினரும் இதை வலியுறுத்தி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் மணிவேல் நேற்று தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் கல்பாறைக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் கர்நாடகாவுக்குள் சிக்கி கொண்டது குறித்து நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இதைப் பார்த்த கன்னடர்கள் எப்படியோ, என்னுடைய செல்போன் எண்ணை பெற்று மிரட்ட தொடங்கினர். எனவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, இது குறித்து நாமக்கல்லில் உள்ள நான் பணியாற்றும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளரிடம் தெரிவித்தேன். அவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு நாமக்கல் வந்து விடுமாறு கூறினார். அதன்படி தப்பித்து தமிழகம் திரும்பினேன்.

கர்நாடகாவில் என்னை தாக்கி ஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்தியது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளேன். எனக்கு ஏற்பட்ட அவமானம், தமிழகத்தை சேர்ந்த எந்த லாரி ஓட்டுனருக்கும் இனி ஏற்படாத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இனி கர்நாடகாவுக்கு செல்ல மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News