செய்திகள்

கிரானைட் முறைகேடு புகார்: 3 நிறுவனங்களின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2016-09-07 06:00 GMT   |   Update On 2016-09-07 06:00 GMT
கிரானைட் முறைகேடு புகாரில் 3 நிறுவனங்கள் மீது மேலூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேலூர்:

கிரானைட் முறைகேடு புகாரில் 3 நிறுவனங்கள் மீது மேலூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, மேல வளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு நிறுவனங்கள் மீது புகார்கள் கூறப்பட்டது.

இது தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட்ஸ் உள்ளிட்ட பல கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மேலூர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கேலக்சி எண்டர்பிரைசஸ், சுபாரெட்டி, குமார் ஆகிய 3 நிறுவனங்கள் நாவிணிப்பட்டி, கீழவளவு, இ.மலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பட்டா இடங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்திருந்ததாக புகார் கூறப்பட்டு இருந்தது. இந்த நிறுவனங்கள் மீதான குற்றங்கள் குறித்து இன்று மேலூர் கோர்ட்டில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அரசு வழக்கறிஞர் ஷீலா கிரானைட் வழக்கை விசாரிக்கும் ஆய்வாளர்கள் பிரகாஷ், ராஜாசிங், சங்கர் ஆகியோர் இந்த குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்தனர்.

3 ஆயிரத்து 760 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் 3 நிறுவனங்களும் ரூ.89 கோடியே 14 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News